கவனச் சிதைவு :
புத்தம்புது இருசக்கரவாகனம் சத்தமில்லாமல் பறக்கிறது ....... மழைமுடிந்த மாலை நேரம் சளைக்காமல் நானும் அவனும்... எங்கிருந்தோ கசிகிறது எங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்று .. சந்திப்பிள்ளையாரின் மேலே பிரகாசமாய் புத்தம் புதியதொரு உபய மின்விளக்கு.... தெரு நாயொன்று சாலை ஓரத்தில் சற்றுமுன்தான் பிரசவித்திருக்கிறது .... அறுபதடிப் பலகையில் அரைகுறை ஆடையில் எங்கோ அழைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்.... அப்போதுதான் நிகழ்ந்தது அது எப்போது குறுக்கே வந்தது ”அது” ............ நிறைந்த காயங்களுடன் நிமிர்கிறேன் நான் சதைக்கூளங்களுக்கு நடுவே அசையாமல் அவன் அள்ளி அணைத்து அவசரமாய் ஓடியும் அவனை நிறுத்த முடியவில்லை கையில் ஏந்தி நின்ற என்னிடம் ’எல்லாம் முடிந்து விட்டதாக’ கைவிரித்து விட்டனர்.............. காலங்கள் நகர்ந்தன காயங்கள் உலர்ந்தன..... புத்தம்புது இருசக்கர வாகனம் சத்தமில்லாமல் பறக்கிறது மழைமுடிந்த மாலை நேரம் சளைக்காமல் நான் மட்டும் அதே பாட்டு மங்கிய விளக்கு குட்டிக் குட்டி நாய்கள் அழைத்துக் கொண்டிருக்கும் அவள் அவனில்லாமல் நான்......................